பிரம்மாண்டமான கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரையில் இன்று திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!
பிரம்மாண்டமான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று மதுரையில் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
கலைஞர் நூற்றாண்டு நூலகம்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான இன்று 15-ஆம் தேதி பிரம்மாண்டமான "கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்படும் என்று சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரூ. 215 கோடி செலவில் மதுரை புது நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 2.61 ஏக்கர் இடத்தில் 2,13,338 சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் கூடிய பிரம்மாண்டமான நூலகம் இன்று மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படுகிறது.
உலகில் உள்ள அனைத்து பெரிய நூலகங்களுக்கும் சவால் விடும் அளவிற்கு கட்டப்பட்டுள்ள இந்த நூலகம் மதுரையின் அடையாளமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி, லிப்ஃட் வசதி,நகரும் படிக்கட்டுகள்,கண்காணிப்பு கேமராக்கள் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில் 3.5 லட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பிரம்மாண்டமான நூலகத்தில் பார்வையற்றோருக்கான பிரிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, சிறுவர்கள் பிரிவு,சிறுவர் அறிவியல் பூங்கா, போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் பகுதி,மாநாட்டு கூடங்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக ஒவ்வொரு தளத்திலும் தனித்தனியாக கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திறப்பு விழா
இந்நிலையில் இன்று மதுரை செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மாலை 5 மணி அளவில் இந்த கலைகள் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்கிறார்.
திறப்பு விழாவை முன்னிட்டு நூலகம் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.