அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கம் - திமுகவில் சலசலப்பு
தமிழ்நாட்டில் திமுகவின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ள நிலையில், அதிலிருந்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 ஆண்டுகள் முடிந்தது
தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு.
ஆட்சி பொறுப்பேற்ற உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்களுக்கு முதல் கையெழுத்திட்டார்.
இது போன்று பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியும், அதை நடைமுறைப்படுத்தியும் வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
இதை தொடர்ந்து திமுக அரசு ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 3 ஆண்டு தொடங்கியுள்ளதை அடுத்து,
நிதியமைச்சர் பெயர் நீக்கம்
திமுகவின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில் 2,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரை பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பார் என கூறப்பட்டிருந்த நிலையில், அவரது பெயர் நோட்டீஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பதிலாக முனைவர் ஜெயரஞ்சன் அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயர் திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதில் வேறு பேச்சாளரை நியமித்தது மதுரை திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.