அட்சய பாத்திரத்தில் பிச்சை கேட்பது போன்று கேட்கவில்லை - மத்திய அரசை சாடிய அமைச்சர் மனோ தங்கராஜ்!
அட்சய பாத்திரத்தில் பிச்சை கேட்பது போன்று கேட்கவில்லை என புயல் நிவாரண நிதி தொடர்பாக மத்திய அரசை சாடியுள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
புயல் பாதிப்பு
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு தொடர்ந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இடைக்கால நிவாரணமாக சுமார் ரூ.5000 கோடி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மனோ தங்கராஜ்
ஆனால் மத்திய அரசு சுமார் ரூ.450 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியது. இதற்கு திமுகவினர் பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில் "5000 கோடி ரூபாய் கேட்டால், 400 கோடி ரூபாய் தந்தால் எப்படி போதுமானதாக இருக்கும்.
நாங்கள் அட்சய பாத்திரத்தில் பிச்சை கேட்பது போன்று கேட்கவில்லை. நாங்கள் கொடுத்த பணத்தை கேட்கிறோம். ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் கிடைக்கக் கூடிய நிதியில் நாம் கடைசியாக இருக்கிறோம். இதுதான் வருத்தமாக உள்ளது. 5000 கோடி ரூபாய்க்கு 400 கோடி ரூபாய் என்பதை நியாயப்படுத்தவே முடியாது" என்றார்.