செந்தில் பாலாஜியின் கைதுக்கு அண்ணாமலை உடனான தனிப்பட்ட பகை தான் காரணம் - மா.சுப்பிரமணியன்!
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
அமைச்சர் கைது
அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு ரத்த நாளங்களில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு பைபாஸ் சர்ஜரி தனியார் மருத்துவமனையில் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அதன்பிறகு நீதிபதி மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியிடம் நேரில் விசாரணை நடத்தினார். இதை அடுத்து இவருக்கு வரும் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மா.சுப்பிரமணியன் பேட்டி
இந்நிலையில், சுகாதார அமைச்சரான மா.சுப்பிரமணியன் இது குறித்து நேர்காணலில் பேசியுள்ளார். அதில் அவர், "செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்தவிதமான விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை.
உடல்நிலை பாதிக்கும் வகையில் அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை 18 மணி நேரத்துக்கும் மேல் அடைத்துவைத்து டார்ச்சர் செய்துள்ளனர். திமுக மீதும், திமுக தலைவர்கள் மீதும் எந்த குற்றத்தையும் நிரூபிக்க முடியாமல் பாஜக திண்டாடுகிறது.
சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலை தோற்றதற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு அழைக்கிறார். ஒன்றிய பாஜக ஆட்சியின் தோல்விகளை மறைக்க நடத்தும் நாடகம்தான் கைது நடவடிக்கை. எதிர்க்கட்சிகள் மீது களங்கம் ஏற்படுத்துவது மட்டுமே பாஜகவின் குறிக்கோள்" என்று கூறியுள்ளார்.