இளங்கலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயமா? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
இட ஒதுக்கீடு அடிப்படையிலும் முதலமைச்சர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
கோவி.செழியன்
உயர்கல்வியை மேம்படுத்துவது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் சென்னை பல்கலைகழக வளாகத்தில் இன்று(11.12.2024) உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கோவி.செழியன், "இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை கருத்தில் கொண்டு, வர கூடிய கல்வியாண்டில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.
நுழைவுத் தேர்வு
பல்கலைக்கழக மானிய குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கி இருந்தாலும் அனைத்தையும் தமிழக அரசு ஏற்காது. அவர்களின் பரிந்துரைகளை ஆய்வு செய்த பிறகே ஏற்பதா இல்லையா என முடிவு செய்யப்படும்.
அதே போல் இளங்கலை பட்ட்டபடிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடத்தப்படும் என்ற கருத்தை ஏற்க முடியாது. சென்னை பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களின் கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது மறு பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஆணைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர், டிஆர்பி மூலமாக தகுதித் தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், மதிப்பெண் அடிப்படையில் மட்டுமல்லாமல் இட ஒதுக்கீடு அடிப்படையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஊக்கத்தொகை வழங்கப்படும்” என தெரிவித்தார்.