பொங்கல் பரிசில் ரூ.1000 ஏன் இடம் பெறவில்லை? - அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இடம் பெறாதது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு சார்பில், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உட்பட பல பொருட்கள் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வந்தது.
பொங்கல் பரிசு தொகுப்பு
2019, 2020 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் ரொக்கம் சேர்க்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்கப்பட்டதை 2,500 ரூபாய் உயர்த்தி வழங்கினார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
2022ஆம் ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்ட நிலையில், 2023, 2024 ஆண்டுகளில் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது,. இதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு மட்டுமே இடம் பெற்றிருந்தது. ரூ1000 குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
அமைச்சர் விளக்கம்
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, "கடந்த ஆண்டு புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவிட்டுள்ளோம். பேரிடருக்காக மத்திய அரசிடம் கேட்ட தொகையை விட சொற்ப தொகையே வழங்கியதால் மாநில அரசின் நிதியில் இருந்து செலவிட்டுள்ளோம்.
அந்த வகையில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் ரூ.1000 வழங்க முடியவில்லை. மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்குவது குறித்து பரிசீலிக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.