மேகதாதுவில் ஒரு செங்கல்லைக் கூட கர்நாடகா அரசால் எடுத்து வைக்க முடியாது - துரைமுருகன் ஆவேசம்!
காவிரி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
காவிரி விவகாரம்
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வின்போது காவிரி விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்துக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன்"காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கர்நாடகாவின் மேகதாது அணை குறித்து விவாதிக்கவே கூடாது என தமிழ்நாடு , கேரளா மற்றும் புதுச்சேரி அரசு பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மத்திய அரசின் நீர்வளத்துறையும் மேகதாது அணை தொடர்பாக மேலாண்மை ஆணையம் விவாதிக்க கூடாது என வலியுறுத்தியது. காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் இறுதியானது.
வெளிநடப்பு
காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டுக்கானது மட்டுமே. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறித்தான் காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது விவகாரத்தை விவாதிக்கிறது.
தமிழ்நாடு அரசின் ஒப்புதலைப் பெறாமல் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா அரசால் ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்க முடியாது. மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் அரசியலுக்காக பயன்படுத்துகின்றனர்.
தமிழ்நாடு தொடர்ந்தும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகிறது" என்றார். ஆனால் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.