திமுகவுக்கு வாயும்..வாய்மையும் தான் பலம்..எந்த கொம்பனாலயும் முடியாது - துரைமுருகன்
திமுகவுக்கு வாயும், வாய்மையும் தான் பலம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
துரைமுருகன்
சென்னை, கலைஞர் அரங்கில் டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். இதில், அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சுப.வீரபாண்டியன், ஈரோடு தமிழன்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “திமுகவுக்கு அதிகமாக இளைஞர்கள் வருகிறார்கள். அவர்கள் புலிக் குட்டிகளாக உள்ளார்கள். அதை பார்த்து என் கண்கள் கலங்கி விட்டது. திராவிடர் கழகம் மற்றும் திமுக வளர்ந்தது பேச்சு மற்றும் எழுத்தால் தான். திமுக 1967இல் வெற்றி பெற்றவுடன், அரசாங்க எம்பலத்தில் ’சத்தியமேவ ஜெயேதே’ என்று இருந்தது.
வாயும், மையும் தான்
இதற்கு என்னய்யா தமிழில் போட வேண்டும் என்று அண்ணா கேட்டாராம். அதற்கு நாவலர், சத்தியம் என்றால் உண்மை. உண்மை வெல்லும் என்று போடலாம் என தெரிவித்தாராம். அதற்கு கலைஞர் ’வாய்மையே வெல்லும்’ என்று கூறினாராம்.
இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்கையில், எங்கள் வாயும் எங்கள் மையும் தான் வென்றுள்ளது என்று அப்போது கலைஞர் கூறினார். அவர் கூறியதுபோல், திமுகவுக்கு வாயும், வாய்மையும் தான் பலம். அதை வெல்ல தமிழகத்தில் எந்த கொம்பனுக்கும் அருகதை கிடையாது.
இளைஞர்கள் புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். அந்த ஆர்வத்தை இளைய சமுதாயத்தினர் பெற்றுக் கொள்ள வேண்டும். இளைஞர்கள், தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்றாலும் அறிந்திருக்க வேண்டும். பழைய ஏடுகளை ஒதுக்காதீர்கள். அங்கு தான் பலம் புரிந்த ஆயுதம் உள்ளது. புத்தகம் தான் நமக்கு பலம், புத்தகங்களை படியுங்கள்” என்று கூறியுள்ளார்.