பயணிகளை செருப்பால் அடித்த ராணுவ படை வீரர்கள்- ரயிலை நிறுத்தி போராட்டம்!
ராணுவப் படையினர் பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியது அதிர்ச்சி அளித்துள்ளது.
ராணுவ வீரர்கள்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று கோவை நோக்கி சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. அப்போது இந்த ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் 20க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் பயணித்துள்ளனர்.அதே பெட்டியில் பயணிகளின் கூட்டமும் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில், ரயிலில் பயணித்த துணை ராணுவப் படையினர் மது அருந்தியதாகவும் தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டு சகா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.இரவு சுமார் 2 மணிக்கும் மேலாக அவர்கள் கத்திக்கொண்டு பயணிகளை தூங்கவிடாமல் தொந்தரவு அளித்துள்ளனர்.
இதனால் தூங்க முடியாமல் மக்கள் தவித்துள்ளனர். இதனையடுத்து, இரு பயணிகள் இது குறித்து துணை ராணுவப்படையினரிடம் கேட்டனர். அதற்கு அவர், 'தாங்கள் ராணுவ வீரர்கள் எங்களிடமே கேள்வி கேட்கிறீர்களா? என்று கேட்டதாகவும், மேலும் இரு பயணிகளை மிரட்டி தாக்கியதாகவும், செருப்பால் அடித்ததாகவும் சொல்லப்படுகிறது.
பயணிகள் போராட்டம்
அதே சமயத்தில், ராணுவப் படையினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.அதில், ஒருவருக்கு ரத்தக்காயமும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.
இந்த தகவலறிந்து வந்த, ரயில்வே போலீசாரிடம் பயணிகள் துணை ராணுவப் படையினரை ரயிலில் இருந்து வெளியேற்றினால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசார் துணை ராணுவப் படையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கீழே இறக்கிய பிறகு அங்கிருந்த அந்த ரயில் புறப்பட்டு சென்றது.
மேலும், துணை ராணுவப்படையினர் ரயிலில் ஏறியதில் இருந்து பயணிகளுக்கு தொந்தரவு அளித்ததாகவும், குறிப்பாக பெண் பயணிகளை பாத்ரூம் செல்லவிடாமல் ஹிந்தியில் திட்டியதாகவும் ரயிலில் பயணித்த பயணிகள் கூறினர்.