பள்ளி மீது வெடிகுண்டு வீச்சு - 41 மாணவர்கள் பரிதாப பலி!
உகாண்டாவில் பயங்கரவாதிகள் பள்ளி விடுதியில் தாக்குதல் நடத்தியதில் 41 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உகாண்டா
மேற்கு உகாண்டாவில் காங்கோ எல்லைக்கு அருகே உள்ள பள்ளி ஒன்றில் அதிரடியாக நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கு ஆண்கள் விடுதியை நோக்கி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும், அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற மாணவர்களை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த தாக்குதலில், தீயில் உடல் கருகி 20 பேரும், கத்திக்குத்தில் காயம் பட்டு 17 மாணவர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், 4 ஊழியர்களும் இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
ராணுவம்
இதனை தொடர்ந்து, தகவல் அறிந்து விரைந்த ராணுவம் மற்றும் காவல்துறையினர் பள்ளியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சுமார் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பல மாணவிகளை காணவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பினர் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.