அதெல்லாம் இருந்தும் மோசமாக ஆடும் அணி இந்தியாதான் - முன்னாள் கேப்டன் தாக்கு!
முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வான், இந்திய அணி குறித்து பேசியுள்ளார்.
இந்திய அணி
உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது.
இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனையடுத்து நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மோசமாக ஆடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்நிலையில் மூன்றே நாட்களில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததை பல்வேறு முன்னாள் வீரர்களும் விமர்சித்து வருகின்றனர்.
என்ன இல்லை..?
அந்தவகையில் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வான், இந்திய அணி குறித்து கூறியதாவது "சமீப காலங்களில் இந்திய அணி அதிக வெற்றிகளைப் பெறவில்லை.
அணியில் அதீத திறமை இருக்கிறது, ஆனால், திறமைக்குக் குறைவாக ஆடும் அணியாக உள்ளனர். இந்திய அணியில் ஏராளமான திறமைகள், வள ஆதாரங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு அவர்கள் நிறைய வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் இருமுறை டெஸ்ட் தொடரை வென்றனர். அது அபாரம். இந்திய அணியிடம் என்ன இல்லை, திறமைக்குக் குறைவா, அல்லது வள ஆதாரங்களுக்குத்தான் குறைவா?" என்றார்.