மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு- அதிகாரிகளுக்கு அலர்ட் கொடுத்த அமைச்சர்!
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், பாதிப்பிற்குள்ளாகும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், பாதிப்பிற்குள்ளாகும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவமழையின் காரணமாக பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளும் வகையில்,
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினைச் சார்ந்த 365 வீரர்கள் நீலகிரி, கோயம்புத்தூர் திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் முன் கூட்டியே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பேரிடர் மீட்பு படை
இந்த பேரிடர் மீட்பு படைகள் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும். பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண். 94458 69848 மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.மேலும் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.