மெட்ரோ: ரூ.320 கோடியில் தலைமை அலுவலகம் திறப்பு!
மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு கட்டப்பட்ட தலைமை அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தலைமை அலுவலகம்
சென்னை, நந்தனத்தில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகமானது 3.90 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.320 கோடி செலவில் 12 மாடி கட்டிடமாக கண்ணாடி சுவர்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
இதில் 6 மாடிகள் மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கும், 6 மாடிகள் தனியார் மற்றும் அரசு துறைகளுக்கு வாடகைக்கு விடப்பட உள்ளது. இதற்கு அருகிலேயே மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்கான குடியிருப்புகளும் உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்புர விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், துணை மேயர் மகேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் மெட்ரோ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, “சென்னை மெட்ரோ ரயில் நிலைய தலைமை அலுவலகத்தை திறந்து வைப்பதில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து இதுபோன்று திட்டங்களை கொண்டு வந்து பொதுமக்களுக்காக செயல்படுத்துவதை வரவேற்கிறேன்.
மெட்ரோ சேவை
இதுவரை 810 கிலோ மீட்டர் தொலைவில் நாடு முழுவதிலும் மெட்ரோ அமைக்கப்பட்டுள்ளது. 54 கிலோ மீட்டர் தொலைவில் சென்னையில் ஏற்கனவே மெட்ரோ பணிகள் நிறைவடைந்து உள்ளது. 1000 கிலோ மீட்டருக்கான சேவையை முடிக்க வேண்டும் என்பது எங்களுடைய குறிக்கோள்.
சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சேவைக்கு இணையாக இந்திய மெட்ரோ சேவையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் மக்கள் அனைவரும் இதை சுலபமாக பயன்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் திட்ட சேவை அமையும்” எனக் கூறினார்.