இன்ஸ்டாகிராமில் இருந்த ஆபத்தை கண்டறிந்த தமிழ்நாடு மாணவர் - வெகுமதி அளித்த Meta
இன்ஸ்டாகிராமில் இருந்த பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்த மாணவருக்கு மெட்டா நிறுவனம் வெகுமதிஅளித்துள்ளது.
இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் சமூகவலைத்தளம் ஆகும். மெட்டா என்பது இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனம் ஆகும்.
இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் உள்ள மிகப்பெரிய சிக்கலை அந்த நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று மெட்டாவின் பாராட்டை பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டு மாணவர்
பிரதாப் என்ற மாணவர் கோவை ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார்.
இணைய பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் கொண்ட பிரதாப், இந்திய வருமான வரித்துறை இணையதளம், nykka, L'Oréal போன்ற இணையதளங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து தகவல் அளித்துள்ளார்.
பாராட்டிய மெட்டா
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் கமெண்ட் செக்சனில் GIF - Graphic Interchange Format பாணியில் சைபர் தாக்குதல் நடத்துமளவு பாதுகாப்பில் சிக்கல் இருந்துள்ளது. அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் பயனர் மட்டுமின்றி, இன்ஸ்டாகிராமின் உரிமையாளரான மார்க் ஸுக்கர்பெர்க் கூட அந்த பகுதியை அணுக முடியாது.
இவர் கடந்த ஜூலை மாதம் இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து மெட்டா நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
தற்போது இந்த பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்துள்ள மெட்டா நிறுவனம், அவரது செயலை பாராட்டும் விதமாக அவருக்கு வெகுமதி அளித்ததோடு, சிறந்த ஆராய்ச்சியாளர்களை கௌரவிக்கும் மெட்டா நிறுவனத்தின் Hall of Fame பட்டியலிலும் அவரது பெயரை இணைத்துள்ளது.