வைரம் கொட்டிக் கிடக்கும் கிரகம்; அதுவும் பூமிக்கு அருகிலேயே.. விஞ்ஞானிகள் ஆச்சர்யம்!
பூமிக்கு அருகில் இருக்கும் ஒரு கிரகத்தில் வைரம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
டன் அளவில் வைரம்
பூமியை போன்று ஒரு கிரகம் இருக்கிறதா? அதில் மனிதனைப் போல வேறு யாரும் வாழ்கிறார்களா? என பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் நிலவு, செவ்வாய் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
அதில் சூரிய குடும்பத்தில் 7 மற்றும் 8வது கிரகமாக இருக்கும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களில் வைரங்கள் இருப்பதை உறுதி செய்தனர். இந்நிலையில், அதை விட நமக்கு மிக அருகில் இருக்கும் மற்றொரு கிரகத்தில் பல மில்லியன் டன் அளவில் வைரம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
புதன் கிரகம்
பெல்ஜியம் மற்றும் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் புதன் கிரகத்தின் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், இவை அனைத்தும் உருகிய வடிவிலேயே இருக்கிறது.
அவை புதன் கிரகம் முழுவதிலும் கடலைப் போல காட்சியளிக்கிறது. புதன் கிரகத்தின் மேல்தட்டு சுமார் 80 கி.மீ., ஆழமாக இருக்கலாம். அதீத வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தின் காரணமாக மேல் தட்டுக்கு கீழே புதைந்திருக்கும் கார்பன் படிவங்கள் வைரக் கட்டிகளாக மாறியிருக்கலாம்.
அதுவும் அந்த வைர படிவத்தின் தடிமன் 15 கி.மீ., இருக்கும். ஆனால், இந்த வைரங்களை வெட்டி எடுப்பதற்கு சாத்தியமில்லை. ஏனெனில், புதனின் மேற்பரப்பில் இருந்து பல கிலோ மீட்டர் ஆழத்தில் வைரப் படிவங்கள் இருப்பதால், அதை மனிதர்களால் பயன்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.