மருத்துவ மாணவி தற்கொலை - சிக்கிய கடிதம்!! தலைமறைவான சீனியர்கள் - பிடிபட்ட பேராசிரியர்!!
மருத்துவக் கல்லுாரி மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரியின் பேராசிரியர் அதிரடியாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவி தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச் சேர்ந்தவர் சுகிர்தா (27). இவர் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் எம்.பி.பி.எஸ். படித்தார். பின்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி மாணவி சுகிர்தா கல்லூரி விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உடல் தசைகளை தளர்வடையச் செய்யும் ஊசி போட்டு மாணவி தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தியதில், மாணவி எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
பேராசிரியர் கைது
அந்த கடிதத்தில் "பேராசிரியர் பரமசிவம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், தன்னுடன் படித்த மாணவர்களான டாக்டர்கள் ஹரீஸ், பிரீத்தி ஆகியோர் மன ரீதியில் துன்புறுத்தியதாகவும் எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் கடந்த 6 நாட்களாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், நேற்று பேராசிரியர் பரமசிவத்தை கைது செய்துள்ளனர். 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் பரமசிவத்தை நாகர்கோவில் சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையில் சீனியர் மாணவர்கள் ஹரீஸ் மற்றும் பிரீத்தி இருவரும் தலைமறைவான நிலையில், அவர்களை தேடும் பணியிலும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.