காவிரி விவகாரம்: அனைத்து அரசியல் கட்சிகளும் இதை செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
காவிரி விவகாரத்தில் தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். .
காவிரி விவகாரம்
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் காவிரி நதிநீர் பங்கீட்டில் பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. தமிழக அரசு ஒவ்வொரு முறையும் இந்த விவகாரத்தில் மத்திய அரசையும், உச்சநீதிமன்றத்தையும் நாடி தமிழகத்திற்கான தண்ணீரை பெற்று வருகிறது.
அந்த வகையில், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக அரசு கேட்ட தண்ணீரை விடவும் கர்நாடக அரசு குறைத்து தந்திருக்கிறது. இம்முறையும், தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.
வைகோ வலியுறுத்தல்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ "காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் போக்கை தடுத்து நிறுத்துவதற்காக தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் சேர்ந்து போராட வேண்டும்.
காவிரி பிரச்சினையில் ஆபத்து நம் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதலமைச்சரும், தமிழக அரசும் பிரச்சினைக்கு இடம் கொடுக்காமல் தடுத்து நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். அப்படி ஒரு அழைப்பு விடுக்கப்பட்டால், அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக அரசின் பின்னால் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.