எல்லை மீறிய பிரித்வி ஷா நடத்தை.. இரவு முழுக்க என்ன செய்தார் தெரியுமா? கிழித்த அதிகாரி!
பிரித்வி ஷா குறித்து மும்பை மாநில கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரித்வி ஷா
அண்மையில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி ட்ராபி கிரிக்கெட் தொடரில் பிரித்வி ஷா நடந்து கொண்ட விதம் குறித்து பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் தெரிவந்துள்ளது. அதாவது, மும்பை மாநில கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த அதிகாரி ஒருவர் பிரித்வி ஷா மீது சரமாரியான குற்றசாட்டுகளை அடுக்கி வைத்துள்ளார்.
இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பிரித்வி ஷா நீண்ட காலமாகவே இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். அடுத்த சச்சின், அடுத்த சேவாக் என புகழப்பட்ட இவர் தற்போது மோசமான நிலையில் இருக்கிறார்.
அவர் ஒழுக்கமாக இல்லை எனவும், நண்பர்களுடன் ஊர் சுற்றித்திரிவதாகவும் சில குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாகவே உள்ளன. அந்த வகையில், 2024 சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் மும்பை மாநில அணியில் பங்கேற்றார். அதில்மிகவும் மோசமாக விளையாடி இருந்தார்.
அடுத்து நடக்க உள்ள விஜய் ஹசாரே எனும் உள்ளூர் ஒருநாள் தொடரில் மும்பை அணியில் பிரித்வி ஷாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அது குறித்து அவர் சமூக வலைதளங்களில் தனது பேட்டிங் சராசரி உள்ளிட்ட புள்ளி விவரங்களை வெளியிட்டு,
சிறப்பாக விளையாடிய தனக்கு அணியில் இடமில்லை என புலம்பினார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள மும்பை மாநில கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த அதிகாரி சில உண்மைகளை போட்டு உடைத்தார். அவர் கூறியதாவது, "சையது முஷ்டாக் ட்ராபியில் நாங்கள் பத்து ஃபீல்டர்களுடன் விளையாடினோம்.
கிழித்த அதிகாரி
பிரித்வி ஷாவை ஃபீல்டிங்கின் போது ஆடுகளத்தில் ஒளித்து வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம். அவர் அருகே பந்து சென்றால் அதை எடுப்பது கூட அவருக்கு சிரமமாக இருந்தது." "பேட்டிங் செய்த போது பந்தை பார்த்து அடிப்பது அவருக்கு கடினமாக இருந்தது.
அவரது உடற்தகுதி, ஒழுக்கம், அணுகுமுறை எல்லாம் மிக மோசமாக இருந்தது. ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிகளை அமல்படுத்த முடியாது. அணியில் இருந்த மூத்த வீரர்களும் அவரது அணுகுமுறை, நடந்து கொள்ளும் விதம் குறித்து புகார் சொல்லத் தொடங்கிவிட்டனர்.
அவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் பதிவுகளால் மும்பை மாநில கிரிக்கெட் அமைப்போ அல்லது மும்பை மாநில தேர்வு குழுவினர் எடுக்கும் முடிவுகளில் எந்த தாக்கமும் ஏற்படாது." என்றார் அந்த அதிகாரி.
இதன் மூலம் பிரித்வி ஷாவை மும்பை மாநில கிரிக்கெட் அணி ஒதுக்கி வைத்திருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. சமீபத்தில் ஐபிஎல் அணிகளால் புறக்கணிக்கப்பட்ட பிரித்வி ஷா, தற்போது மாநில அணியாலும் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். என்று கூறினார்.