கேல் ரத்னா விருது பரிந்துரை சர்ச்சை..அது என் இலக்கு அல்ல -மனு பாக்கர் கொடுத்த பதிலடி!
கேல் ரத்னா விருது பரிந்துரை பட்டியலில் தனது பெயர் இடம் பெறாதது குறித்து மனு பாக்கர் விளக்கம் அளித்துள்ளார்.
கேல் ரத்னா விருது
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் இந்தியாவின் சார்பில் நிரஜ் சோப்ரா, மனு பாக்கர் உள்ளிட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினர்.அதில் மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
மேலும் ஒலிம்பிக் போட்டியில் 1 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கம் என மொத்தமாக 6 பதக்கங்களை இந்தியா வென்றது. மேலும், பதக்க அட்டவணையில் 71-வது இடத்தைப் பிடித்தது.
மனு பாக்கர்
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற மனு பாக்கரின் பெயர், இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் கேல் ரத்னா விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட வீரர், வீராங்கனைகள் பட்டியலில் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது .
இது குறித்து மனு பாக்கர் 'X' தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: போட்டிகளில் பங்கேற்று நாட்டிற்காகச் சிறப்பாக விளையாடுவதே என் கடமை. தொடர்ந்து விருதுகளும், அங்கீகாரங்களும் ஊக்கப்படுத்தும் என்றாலும், அது என் இலக்கு அல்ல என்று மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.