அப்படி இருந்தால் தான் சொகுசு என நினைக்கிறேன் - மனிஷா கொய்ராலா பளீச்
திரைத்துறை ஆணாதிக்கம் நிறைந்தது என நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
மனிஷா கொய்ராலா
மணிரத்னம் இயக்கிய பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. முதல் படத்திலேயே அழகாலும், துறு துறு நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பிடித்தார். தொடர்ந்து இந்தியன், முதல்வன் படங்களில் நடித்தார்.
மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 2010ல் சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்து கொண்டு, கருத்து வேறுபாடால் அவரை பிரிந்தார். இதையடுத்து கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் மீண்டார்.
ரீ-எண்ட்ரி
தற்போது, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஹீராமண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனையொட்டி அளித்துள்ள பேட்டி ஒன்றில், எனக்கு நடிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்தமான நடிப்பை எனக்கு பிடித்தமான களத்தில் பிடித்தமான வேளையில் என்னால் செய்ய முடிகிறது.
சஞ்சய் லீலா பன்சாலி ஒரு மேஸ்ட்ரோ. அவருடன் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் மீண்டும் இணையப் போகிறேன். பிஸியாக இருந்தால் தான் பிரபலமான நடிகையாக அறியப்படுவேன் என்று கூறினார்கள். நானும் அப்படித்தான் பிஸியாக இருந்தேன்.
ஆனால் அந்த பரபரப்புக்காக நான் செய்த படங்களில் சில மோசமானவை. இப்போது நான் அப்படியில்லை. என்னால் இது வேண்டாம் என்று நிராகரிக்க முடிகிறது. அதுதான் வெற்றி எனக் கருதுகிறேன். அதுதான் சொகுசு என்றும் புரிந்து கொள்கிறேன். திரைத்துறை என்பது ஆணாதிக்கம் நிறைந்தது.
அதனால் நடிகைகளுக்கு தங்களை நிரூபிக்க குறைந்த அளவிலான வாய்ப்புதான் இருக்கும். ஆனால் சஞ்சய் லீலா பன்சாலி ஒரு விதிவிலக்கு. அவரால் மட்டுமே பெண்களை வைத்து பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் படங்களைக் கொடுக்க முடியும். அவருடைய கங்குபாய் கத்தியாவாடி பார்த்து நான் மிரண்டு போனேன் எனத் தெரிவித்துள்ளார்.