தினசரி ஒரு முறையாவது கட்டாயமாக சிரிக்க வேண்டும்...அமலாகிறது புதிய சட்டம்!
தினசரி ஒரு முறையாவது கட்டாயமாக சிரிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
சிரிக்க வேண்டும்...
இந்த நவீன உலகத்தில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. அனைவரது வாழ்க்கையிலும் மன அழுத்தம் கடும் விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. இதைக் குறைப்பது மிகவும் அவசியமானது. அப்போதுதான் நாம் ஆரோக்கியமன மனநிலையில் வாழ முடியும்.
சிரிப்பதால் நமது ரத்தத்தில் உள்ள மன அழுத்த ஹார்மோன்கள் குறைந்து புத்துணர்ச்சியை உண்டாக்கும். அதாவது, எண்டோர்பின் கெமிக்கல் அதிகரிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சிரிப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
புது சட்டம்
அண்மையில், ஜப்பானின் யமகட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில், தினசரி சிரிப்பவர்களுக்கு மாரடைப்பின் அபாயங்கள் குறைகிறது. சிரிப்பது மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றையும் பெருமளவில் குறைப்பதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, யமகட்டா மாகாணத்தில் தினசரி அனைவரும் ஒரு முறையாவது கட்டாயமாக சிரிக்க வேண்டும் என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாதத்தில் வரும் எட்டாவது நாளை சிரிப்பு தினமாக கடைபிடித்து அன்றைய தினம் சிரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டாய சட்டத்தை ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது குறித்து அவர்கள், சிரிப்பது என்பது தனிநபர் உரிமை சார்ந்தது என்றும், அதை கட்டாயப்படுத்தி செய்ய சொல்ல முடியாது என்று கூறியுள்ளனர்.