சினிமாவை மிஞ்சிய மணப்பாறை பேருந்து விபத்து..5 பேர் உயிரிழந்த பரிதாபம் - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
மணப்பாறையில் நேற்று பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனுார் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் டயர் வெடித்து பேருந்து மீது மோதியதில் நிலை தடுமாறிய பேருந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் 5 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்தில் உயிரிழந்த முத்தமிழ்செல்வன், நாகரத்தினம், ஐயப்பன், மணிகண்டன், தீனதயாளன் ஆகிய ஐந்து பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.