வேலைக்கு வராத இளைஞர்கள்..கண்டித்த மேலாளர் - சுத்தியால் அடித்துக் கொலை!
வேலைக்கு வராத இளைஞர்களைக் கண்டித்ததால் மேலாளர் சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை
சென்னை திருவொற்றியூரில் உள்ள மணலி புதுநகரில் தனியாருக்குச் சொந்தமான கன்டெய்னர்கள் நிறுத்தும் இடம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான சாய் பிரசாத் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவரின் கீழ் பாலாஜி ஷாம், சாய் பாரதி, முகிலன் ஆகிய இளைஞர்கள் வேலை செய்து வந்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி பாலாஜி என்பவர் மறுநாள் மாற்றுப் பணியாளர்கள் பணிக்கு வருவதற்கு முன்பே சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் கோவத்தில் மேலாளர் சாய் பிரசாத் பாலாஜியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி நள்ளிரவில் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களான ஷாம், சாய்பாரதி, முகிலன் ஆகியோரை அழைத்துக் கொண்டு மேலாளர் சாய் பிரசாத் தூங்கும் இடத்திற்குச் சென்றுள்ளார்.
கொலை
அப்போது தூங்கிக்கொண்டிருந்த மேலாளர் சாய் பிரசாத்தைச் சுத்தியலால் அடித்துத் தாக்கியுள்ளனர்.இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சாய் பிரசாத் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மேலாளர் சாய் பிரசாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள 4 பேரைத் தேடி வருகின்றனர்.