217 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர் - இப்போ எப்படியிருக்கார் தெரியுமா?
நபர் ஒருவர் 217 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவிட் தடுப்பூசி
உலகம் முழுவதும் பரவிய கொரோன தொற்றால் பல உயிர்களை இழந்து நாட்டையே முடங்க செய்தது. இதனால், அந்த தொற்றை கட்டுப்படுத்த உடனடியாக கொரோன தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பொது மக்களுக்கு செலுத்தப்பட்டது.
இந்த சமயத்தில், பலர் இரண்டு தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவே பயந்தபோது, ஜெர்மனியைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் 217 கோவிட் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டுள்ளார். இந்த செய்தியை அறிந்த ஆராய்ச்சியாளர்கள் ஹைபர்வாக்சினேஷன் உடலில் என்ன விளைவுகளை உண்டாக்கும் என ஆய்வு மேற்கொள்ள விரும்பியுள்ளனர்.
ஜெர்மனியில் உள்ள ஃபிரெட்ரிக் அலெக்சாண்டர் பல்கலைக்கழகம் எர்லாங்கன் நுர்ன்பெர்க் (FAU), முனிச் மற்றும் வியன்னாவில் உள்ள ஆய்வாளர்கள் அந்த நபரை தொடர்பு கொண்டு சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
ஆய்வாளர் தகவல்
இது குறித்து ஆய்வாளர்கள், ``பொதுவாகவே தடுப்பூசிகளில் நோய் கிருமியின் பாகங்கள் இருக்கும். அந்தத் தடுப்பூசி ஒருவருக்குச் செலுத்தப்படும் போது அந்த நபரின் செல்கள் நோய் கிருமியின் கூறுகளை தாங்களாகவே உற்பத்தி செய்து கொள்ளும். பின்னர் உண்மையாகவே அந்த நபர் தொற்றுக்குள்ளாகும் போது நோயெதிர்ப்பு அமைப்பு உண்மையான நோய்க்கிருமியை அடையாளம் காணக் கற்றுக்கொள்கிறது.
ஆனால், ஒரு குறிப்பிட்ட ஆன்டிஜெனை நோயெதிர்ப்பு அமைப்பு அடிக்கடி எதிர்கொண்டால் என்ன நடக்கும். ஹெச்.ஐ.வி அல்லது ஹெபடைடிஸ் பி போன்ற நாள்பட்ட நோய்த்தொற்றில் இது வழக்கமாக இருக்கலாம். தொடர்ச்சியாக ஆன்டிஜென்கள் செலுத்தப்படுவதால் T-செல்கள் எனப்படும் சில வகை நோயெதிர்ப்பு செல்கள் சோர்வடைகின்றன. இவை குறைவான அளவில் ப்ரோ இன்ஃபளமேட்டரி மெசென்ஜர்களை (pro-inflammatory messenger substances) வெளியிடும்.
ஆன்டிஜென்களுடன் இவை பழகுவதால் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்தலாம். நோயெதிர்ப்பு அமைப்பு நோய்க்கிருமியை அவ்வளவு திறம்பட எதிர்த்துப் போராட முடியாது. அதுவே அதிகமாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவரின் ரத்தப் பரிசோதனையின் முடிவுகளை ஆராய்கையில், SARS-CoV-2க்கு எதிராக அவர் அதிக எண்ணிக்கையிலான டி-எஃபெக்டர் செல்களைக் கொண்டிருக்கிறார்.இந்த செல்கள் வைரஸை எதிர்த்துப் போராடும் வீரர்களாக இருக்கின்றன.
மூன்று தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்ட நபர்களோடு ஒப்பிடுகையில், இந்த நபர் அதிகளவில் இந்த செல்களை கொண்டிருந்தார். அவற்றின் செயல்திறனில் எந்தச் சோர்வையும் ஆராய்ச்சியாளர்களால் உணர இயலவில்லை. சாதாரண எண்ணிக்கையிலான தடுப்பூசிகளைப் பெற்றவர்களில் இருந்ததைப் போலவே அவையும் பயனுள்ளவையாக இருந்தன’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.