சிறுநீர் கழித்து அவமதித்த பழங்குடியினரின் காலை கழுவிய முதல்வர் - இணையத்தில் வைரல்!
மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்ததால் அம்மாநில முதல்வர் அவரது காலை கழுவிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
சிறுநீர் கழித்த சம்பவம்
மத்திய பிரதேச மாநிலம், சித்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பர்வேஷ் சுக்லா, இவர் சமீபத்தில், தஷ்மத் ராவத் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் மீது சிகரெட் புகைத்தபடி சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வந்த நிலையில் இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர், பின்னர் அவரது வீட்டையும் மாவட்ட நிர்வாகம் இடித்தது.
முதல்வர்
இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அந்த பழங்குடியின இளைஞரை வரவழைத்து இருக்கையில் அமரவைத்து அவரது காலை கழுவினார். மேலும், அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பரிசு பொருட்களை கொடுத்து அனுப்பிவைத்தார்.
இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வந்த நிலையில், அம்மாநில முதல்வர் கூறுகையில், "என்னை பொறுத்தவரை, ஏழைகளே கடவுள். மக்களை கடவுளாக மதிக்கிறேன். மக்களுக்கு சேவை செய்வது என்பது கடவுளை வழிபடுவதற்கு சமம். ஒவ்வொரு மனிதனிலும் கடவுள் வாழ்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது. தஷ்மத் ராவத்திற்கு ஏற்பட்ட துயரம் வேதனையை அளித்தது. ஏழைகளுக்கு பாதுகாப்பும் மரியாதையும் அளிப்பது மிகவும் முக்கியம்" என்றும் கூறியுள்ளனர்.