5 வயது சிறுமியை சீரழித்து, சாக்கில் கட்டி குப்பையில் வீசிய இளைஞர் - மன்னிப்பு கோரிய போலீசார்!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று குப்பையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி மாயமானார்
கேரளா மாநிலம், அலுவா மாவட்டம் பகுதியில் பீகாரை சேர்ந்த தம்பதி கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயது சிறுமி உள்ளார். இவர் வெள்ளிக்கிழமை மாலை திடீரென மாயமானார், பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, சிறுமியை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்பொழுது சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த சிறுமியை பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி அழைத்து செல்வதை கண்டுபிடித்தனர், பின்னர் அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
குப்பையில் கிடந்த மூட்டை
இந்நிலையில், ஆலுவா சந்தையின் பின்புறத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் மூட்டை இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூட்டையை பிரித்து பார்த்தபோது காணாமல் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அப்பொழுது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கேரள மாநில போலீஸின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் "மகளே மன்னித்துவிடு உன்னை உயிருடன் பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்ற எங்கள் முயற்சி நிறைவேறவில்லை" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.