கட்டைவிரல் தோலை உரித்து செய்த விரல்மாறாட்டம் - கடைசியில் நடந்தது என்ன?
ரயில்வே தேர்வில், கைரேகைக்காக கட்டைவிரல் தோலை உரித்து ஆள்மாறாட்டம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரயில்வே தேர்வு
கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி, இந்திய ரயில்வே முதல்கட்ட தேர்வு இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் நடைப்பெற்றது. அதன்படி குஜராத், வதோதராவின் லக்ஷ்மிபுரா பகுதியில் நடைபெற்ற தேர்வில் டிசிஎஸ் ஊழியர் அகிலேந்திர சிங், தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
கை ஸ்கேனிங் கருவி மூலம் மாணவர்களின் கைரேகைகளை சரிபார்த்து வந்தார். அப்போது, பீகாரைச் சேர்ந்த மனீஷ்குமார் சம்பு பிரசாத் வந்தபோது அவரிடம் நடத்தப்பட்ட பல சரிபார்ப்பு முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது.
கைரேகை
தொடர்ந்து, தேர்வு மேற்பார்வையாளர் இரண்டு, மூன்று முறை மனீஷ் குமாரின் கைரேகையை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் இயந்திரத்தில் கைரேகை பதிவாகவில்லை. முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் அவர் கைரேகையை எடுக்க முயன்றார்.
ஆனால் இம்முறையும் பதிவாகாததால் அவருக்கு சந்தேகம் எழுந்தது. இதன் போது மனீஷ்குமார் தனது பேண்ட் பாக்கெட்டில் கையை வைத்துக்கொண்டே இருந்தார். இதனால் எழுந்த சந்தேகத்தினால், அவரது விரலில் சானிடைசர் போடப்பட்டது.
விரல்மாறாட்டம்
இதன் காரணமாக அவரது கட்டை விரலில் ஒட்டியிருந்த தோல் வெளியே வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில், ராஜ்யகுரு குப்தா என்பவருக்கு பதிலாக, தான் தேர்வு எழுத வந்திருப்பதாக மனீஷ் குமார் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, மனீஷ் குமார் மற்றும் ராஜ்யகுரு குப்தா மீது டிசிஎஸ் ஊழியர் ஜஸ்மிம் குமார் கஜ்ஜர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் இருவரும் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
மேலும், விசாரணையில், ராஜ்யகுரு தனது கட்டைவிரலை சூடான தோசைக் கல்லில் வைத்ததால், அவரது கட்டைவிரலில் ஒரு பெரிய கொப்பளம் ஏற்பட்டது. அதை உடைத்து அந்ததோல் மூலம் கைரேகை தோலை உருவாக்கியுள்ளனர். இந்த செயல்பாட்டில் எந்த நிபுணரின் உதவியும் பெறப்படவில்லை என தெரிய வந்துள்ளது.