ஒவ்வொருவரிடமும் ரூ.50 லட்சம்.. ஆள்மாறாட்டம் : நீட் தேர்வில் மெகா மோசடி
மகாராஷ்டிராவில் கோச்சிங் நிறுவனம் ஒன்று நீட் தேர்வில் ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.50 லட்சம் வாங்கிக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற்றது. வழக்கம்போல இந்த முறையும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அந்த வகையில் காராஷ்டிராவில் நீட் தேர்வில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆர்.கே.எஜூகேசன் கேரியர் கைடன்ஸ் பயிற்சி மையம் தான் இதில் சிக்கியுள்ளது. இதுதொடர்பாக பயிற்சி மையத்தின் இயக்குநர் பரிமல் கோட்பள்ளிவார் மற்றும் பல மாணவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடம் இருந்தும் ரூ.50 லட்சம் வரை இந்நிறுவனம் வசூலித்துள்ளதாகவும், ஆள்மாறாட்டம் செய்து தேர்வை எழுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோச்சிங் சென்டரில் இருப்பவர்கள் மாணவர்களின் விண்ணப்பங்களில் தேவையான மாற்றங்களைச் செய்து திட்டமிட்ட தேர்வு மையங்கள் கிடைப்பதை உறுதி செய்கின்றனர்.
அதேபோல் ஆள் மாறாட்டம் செய்ய ஏதுவாக மாணவர்களின் விண்ணப்பத்தில் இருக்கும் புகைப்படங்களையும் அவர்கள் மாற்றியுள்ளனர். மாணவர்களின் ஆதார் அட்டையின் தகவல்களைக் கொண்டு போலியாக அடையாள அட்டையைத் தயார் செய்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சில மாணவர்களுக்கு விடை குறித்த தகவல்களை அளித்ததையும் கோச்சிங் சென்டர் தரப்பில் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தாண்டு தேர்வில் மொத்தம் ஐந்து மாணவர்களுக்குப் பதிலாக ஆள்மாறாட்டம் செய்ய கோச்சிங் நிறுவனம் திட்டமிட்டிருந்ததாகவும், அவர்களை கையும் களவுமாகப் பிடிக்க சிபிஐ அந்த தேர்வு மையங்களில் காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் முன்கூட்டியே இந்த தகவலை எப்படியோ தெரிந்து கொண்ட கோச்சிங் நிறுவனம், அவர்களைத் தேர்வு எழுத மையங்களுக்கு அனுப்பவில்லை. இது தொடர்பாக நேற்று கோச்சிங் சென்டரில் அதிரடி சோதனை செய்த சிபிஐ பலரைக் கைது செய்துள்ளது.