லட்சம் கொடுங்க கோடி கிடைக்கும் - சதுரங்க வேட்டை பாணியில் இரிடிய கலசம் மோசடி
18 லட்சம் முதலீடு செய்தால் 20 கோடி கிடைக்கும் என சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி நடந்துள்ளது.
மதுரை
மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் கடை அருகே ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணியாற்றி வந்த கலைச்செல்வி சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமாகியுள்ளார்.
இவர் அடிக்கடி, இரிடியம் கலசத் தொழிலில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தால், பல கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும், இதில் பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருகிறார்கள் என தெய்வேந்திரனிடம் ஆசை காட்டியுள்ளார். அதை முதலில் நம்பாத தெய்வேந்திரனிடம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் முகமது ரபி என்பவரை செல்போன் மூலம் பேச வைத்துள்ளார்.
இரிடிய கலசம்
போனில் பேசிய முகமது ரபியும் இரிடியம் கலசத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தொடர்ந்து கூறியதில் நம்பிக்கையடைந்துள்ளார் தெய்வேந்திரன். அதன் பின் 2022 ல் மதுரைக்கு வந்த முகமது ரபியைச் சந்தித்து ரூ3 லட்சத்தை கொடுத்துள்ளார். சில நாள்கள் கழித்து மேலும் பணம் கேட்க, ஆன்லைன் மூலம் ரூ.2 லட்சம் அனுப்பியுள்ளார்.
பின்னர், இரிடியம் கலச டீல் தொடர்பான மீட்டிங் எனக் கூறி சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்துள்ளனர். அந்த கூட்டத்துக்கு பல மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்தனர். இவர்கள் முன் பேசிய முகமது ரபி, 2 நாள்களில் அனைவரும் மும்பைக்குச் சென்று லாப பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.
அங்கு தெய்வேந்திரனிடம் பேசிய கலைச்செல்வி, ``உங்களுக்கு வரவேண்டிய ரூ.20 கோடி தயாராக உள்ளது. எனவே கூடுதலாக 5 லட்சம் பணம் எடுத்து வாருங்கள்" என சொன்னதை நம்பிய தெய்வேந்திரன் உடனடியாக 5 லட்சம் கொடுத்துள்ளார்.
விசாரணை
இதுவரை இவ்வாறு ரூ18 லட்சம் கொடுத்த நிலையில், அவர்கள் சொன்னதுபோல் ரூ 20 கோடிக்கான இரிடிய கலசமோ, பணமோ கொடுக்கவில்லை.இது குறித்து கலைச்செல்வியிடமும், முகமது ரபியிடம் தான் கொடுத்த ரூ18 லட்சத்தை திருப்பி கேட்டபோது, இருவரும் தெய்வேந்திரனை மிரட்டியுள்ளனர்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தெய்வேந்திரன் மதுரை தெற்குவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகார் குறித்து திருவள்ளூரைச் சேர்ந்த முகமது ரபி, மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவுசெய்து போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.