கொடுத்த ரூ.5000 பணத்தை திருப்பி கேட்ட முதியவர்.. கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்!
பணத்தை திருப்பி கேட்டதால் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடன் வாங்கிய நபர்
சென்னை, திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசேன் 60 வயதான இவர் சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு இவரிடம் ரூ.5000 கடனாக கேட்டு வாங்கியுள்ளார்.
பின்னர் சில மாதங்களுக்கு முன்பு ராஜன் ரூ.5000-க்கு பதிலாக ரூ.1000 கொடுத்துள்ளார். மீதி பணத்தை தருமாறு வெங்கடேசன் கேட்டுள்ளார், அப்பொழுதெல்லாம் அவர் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த முதியவர் ராஜனை கண்டபடி திட்டியுள்ளார் அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கொடூர கொலை
இந்நிலையில், ராஜன் அந்த முதியவரிடம் பணத்தை திருப்பி தருவதாக கூறி அவரை கார்கில் நகருக்கு வரவழைத்தார். பின்னர், அவரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் சரிந்து விழுந்த அந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.