இளைஞர் சடலத்துடன் பாம்பை உயிருடன் வைத்து எரித்த மக்கள்- பின்னணி என்ன?
இளைஞரின் சடலத்துடன் வைத்து பாம்பைக் கிராம மக்கள் உயிருடன் எரித்துள்ளனர்.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலம், கோர்பா மாவட்டத்தில் வசித்து வந்த திகேஷ்வர் ரதியா. இவருக்கு வயது 22. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை தூங்குவதற்காகப் படுக்கையைத் தயார் செய்திருக்கிறார். அப்போது பாய்யின் உள்பகுதியில் கட்டுவிரியன் பாம்பு இருந்துள்ளது.
இதனை அறியாத திகேஷ்வர் ரதியா கயிறு என நினைத்து பாம்பின் வாலை பிடித்து இழுக்க, அது கோபத்தில் அவரை கடித்திருக்கிறது. வலியில் தாங்க முடியாத இளைஞர் கதறிக் கத்தியுள்ளார். இதனைக் கண்ட குடும்பத்தினர் உடனடியாக இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று திகேஷ்வர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, உடல் தகனம் செய்வதற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறுதிச் சடங்கு
இந்த நிலையில் நேற்று மாலை அவரது இறுதிச் சடங்கு நடந்திருக்கிறது. திகேஷ்வர் ரதியா வீட்டிற்கு மூத்த மகன் என்பதால்,உடலை எரிக்க முடிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று கிராம மக்கள் பாம்பைப் பிடித்து மூடி கூடைக்குள் வைத்திருந்தனர்.
இதனையடுத்து ரதியாவின் இறுதி ஊர்வலம் அவரது வீட்டிலிருந்து சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, கிராமத்தினர் அந்த இடத்திற்குப் பாம்பையும் கொண்டு சென்றுள்ளனர் அப்போது இளைஞரின் உடலுடன் சேர்த்து அவரை கடித்த பாம்பையும் உயிருடன் எரித்திருக்கின்றனர்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவலாக வருகிறது.
மேலும் விஷப்பாம்பு வேறு யாரையாவது தாக்கிவிடுமோ என்று பயந்து, அதை தீயில் வைத்து எரித்துவிட்டதாகக் கிராம மக்கள் சிலர் தெரிவித்தனர்.