வீட்டிலிருந்த பட்டாசுகள் வெடித்து உடல் சிதறி பலியான கொடூரம் - பின்னணியில் நடந்தது என்ன?
வீட்டிலிருந்த பட்டாசுகள் வெடித்து ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பட்டாசுகள்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. 47 வயதாகும் இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் தனது தாயாருடன் அதே பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது தாய்க்கு உடல்நிலை குறைவு காரணமாகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சுழலில் நேற்று (அக்19-ம் தேதி ) இரவு சாகுல் ஹமீது வேடசந்தூரில் உள்ள ஒரு கடையில் பட்டாசுகள் வாங்கி வீட்டுக்குக் கொண்டு சென்றுள்ளார். அப்போது வீட்டில் பட்டாசுகளை வைத்துவிட்டு சாகுல் ஹமீது உணவு அருந்தி உள்ளார். அதன்பிறகு வீட்டிற்குள் உட்கார்ந்து புகை பிடித்துள்ளார்.
எதிர்பாராத விதமாக சிக்ரெட்டில் இருந்து சிதறிய நெருப்பு பட்டாசுகள் மீது விழுந்தது. இதனால் பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துச் சிதறியுள்ளன. இதில் சாகுல் ஹமீது உடல் மீது பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
உடல் சிதறி பலி
இதனையடுத்து பயங்கர வெடிச் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று வீட்டுக் கதவைத் திறந்து பார்த்தபோது சாகுல் ஹமீது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மேலும் வீடு முழுவதும் புகை மூட்டமாக இருந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டிலிருந்த பட்டாசுகளை அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து சாகுல் ஹமீது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்ய வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டிலிருந்த பட்டாசுகள் வெடித்து ஒருவர் உடல் சிதறி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.