52 கோடிக்கு ஏலம் போன வாழைப்பழம் - வாங்கியவர் என்ன சொன்னார் தெரியுமா?
சீன தொழிலதிபர் வாழைப்பழம் ஒன்றை ரூ.52 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கியுள்ளார்.
ஏலம்
இத்தாலியை சேர்ந்த கலைஞர் மவுரிசியோ கட்டெலன், 'காமெடியன்' என்ற தலைப்பில் வாழைப்பழத்தை சில்வர் டக்ட் டேப் கொண்டு ஒட்டி அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்.
இந்த ஏலத்தில் 6 பேர் கலந்து கொண்டனர். 8,00,000 டாலரில் தொடங்கிய ஏலத்தில் சீனாவை சேர்ந்த கிரிப்டோ கரன்சி தொழிலதிபரான ஜஸ்டின் சன், 6.2 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.52 கோடி) கொடுத்து இந்த வாழைப்பழத்தை வாங்கியுள்ளார்.
காப்புரிமை
முதலில் 2019 ஆம் ஆண்டு மியாமி கடற்கரையில் உள்ள பெரோட்டின் கேலரியின் ஸ்டாண்டில் இந்த படைப்பு காட்சிப்படுத்தப்பட்ட போது பெரிய அளவில் விவாதமானது. இதை காண பெரிய அளவிலான கூட்டம் கூடியது. அந்த கால கட்டத்தில் 1,20,000 டாலர் முதல் 1,50,000 டாலர் அளவில் இதன் முதல் 3 படைப்புகள் விற்கப்பட்டது.
தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜஸ்டின் சன் அதை விட 40 மடங்கு விலை கொடுத்து வாங்கியுள்ளார். இந்த பழத்தை வாங்கிய ஜஸ்டின் சன்க்கு, எதிர்காலத்தில் அதேபோன்று வாழைப்பழத்தை சுவற்றில் ஒட்டி அதை 'comedian' என பெயரிடுவதற்கான காப்புரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
ஜஸ்டின் சன்
இந்த பழத்தை வாங்கிய ஜஸ்டின் சன், 'இது வெறும் பழம் மட்டுமல்ல, இது கலை, மீம்ஸ் மற்றும் கிரிப்டோகரன்சி சமூகத்தின் உலகங்களை இணைக்கும் ஒரு கலாச்சார நிகழ்வை பிரதிபலிக்கிறது. வாழைப்பழத்தின் பெருமைக்குரிய உரிமையாளராக இருப்பதில் நான் பெருமையடைகிறேன்.
கலை வரலாறு மற்றும் பிரபலமான கலாச்சாரம் இரண்டிலும் அதன் இடத்தை கௌரவிக்கும் வகையில் இந்த வாழைப்பழத்தை தனிப்பட்ட முறையில் சாப்பிடுவேன்' என கூறியுள்ளார்.