கடவுளின் குழந்தை இப்படி செய்யுமா? அடுத்து மோடிக்கு கோயில் தான் - மம்தா பானர்ஜி சாடல்!
தன்னை கடவுளின் தூதர் என கூறிய பிரதமர் மோடி குறித்து மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடவுளின் குழந்தை
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.அதற்கான பிரச்சாரத்தில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில்,
"நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார். நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது.
அது கடவுளால் மமட்டுமே கொடுக்க முடியும்" இவ்வாறு அவர் பேசியது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இது குறித்து பேசுகையில், தேர்தலில் எங்கே தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தில் அர்த்தமின்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பா.ஜ.க. தலைவர்கள் பேசி கொண்டிருக்கிறார்கள்.
மம்தா பானர்ஜி
இதில் ஒருவர் தன்னை கடவுளின் குழந்தை என்கிறார். நான் கேட்கிறேன், கலவரத்தை தூண்டிவிடவும், விளம்பரங்களின் வழியாக பொய்களை பரப்பவும், என்.ஆர்.சி.யை நடைமுறைப்படுத்துகிறேன் என்கிற பெயரில் மக்களை சிறையில் அடைக்கவுமா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார்? நூறுநாள் வேலை திட்டத்தின் நிதியை நிறுத்தவா,
கிராமப்புற வீடுகள் கட்டப்படுவதை தடுக்கவா தனது தூதரை இறைவன் அனுப்பி வைப்பார்? மக்களின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன் என்கிற உத்தரவாதத்திலிருந்து இறைவன் பின்வாங்குவாரா என்ன?
கடவுளால் இத்தகைய செயல்களை செய்ய முடியாது. பூரியில் உள்ள ஜெகநாதரே பிரதமர் மோடியில் பக்தர் என்று பா.ஜ.க. வேட்பாளர் ஒருவர் பேசியுள்ளார். அடுத்ததாக, பிரதமர் மோடிக்கு அவரின் பக்தர்கள் கோவில் கட்டி பூஜை செய்வார்கள் என்று தோன்றுகிறது. இவ்வாறு சாடியுள்ளார்.