ஆட்டோ-பேருந்து பயங்கர மோதல்; 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி - முதலமைச்சர் நிதியுதவி
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சாலை விபத்து
சென்னையிலிருந்து அரசுப் பேருந்து ஒன்று புதுச்சேரியை நோக்கி மாமல்லபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கல்பாக்கத்தில் இருந்து எதிரே வந்த ஆட்டோ மீது மோதியுள்ளது.
ஆட்டோ நொறுங்கியதில் அதில் பயணித்த 3 பெண்கள், 2 சிறுவர்கள் மற்றும் ஓட்டுநர் உட்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
நிதியுதவி
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.