Israel War: பாலஸ்தீன மக்களுக்கு ரூ.2.5 கோடி; போரை நிறுத்துங்கள் - மலாலா வேண்டுகோள்!
இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ரூ.2.5 கோடி நிதி வழங்குவதாக மனித உரிமை செயற்பாட்டாளரான மலாலா யூசுப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலை நடத்தினர் . இதில் பல இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். தற்போது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்து வருகிறது.
இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். போர் விதிகளை மீறி பாஸ்பரஸ் குண்டுகளை பாலஸ்தீன் மீது வீசியும், தப்பிச் செல்லும் மக்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பல்வேறு நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புகளின் வேண்டுகோளையும் மதிக்காமல் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது உலகையே உலுக்கியது.
மலாலா நிதியுதவி
ஆனால் இந்த தாக்குதலை தாங்கள் செய்யவில்லை என இஸ்ரேல் அரசு மறுத்துள்ளது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல்-ஹாமாஸ் போர் உச்சமடைந்துள்ளது. இந்நிலையில் மனித உரிமை செயற்பாட்டாளரான மலாலா யூசுப், இஸ்ரேலின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன் மக்களுக்காக 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடி) நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது "காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் அதிர்ச்சி அடைந்தேன். இஸ்ரேல் அரசாங்கம் காசாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன் மக்களுக்கு 3 தொண்டு நிறுவனங்கள் மூலமாக 3 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
I’m horrified to see the bombing of al-Ahli Hospital in Gaza and unequivocally condemn it. I urge the Israeli government to allow humanitarian aid into Gaza and reiterate the call for a ceasefire. I am directing $300K to three charities helping Palestinian people under attack. pic.twitter.com/JiIPfnTUvY
— Malala Yousafzai (@Malala) October 17, 2023