Israel: 270 ஆண்டுகளாக ஒரு இன்ச் கூட நகர்த்தப்படாத ஜெருசலேம் மர்ம ஏணி - ஏன் தெரியுமா?
இஸ்ரேலில் 270 ஆண்டுகளாக ஒரு இன்ச் கூட நகர்த்தப்படாமல் இருக்கும் ஜெருசலேம் ஏணி குறித்த தகவல்.
செபுல்கர் தேவாலயம்
இஸ்ரேலின் தலைநகராகவும், கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத மதங்களின் புனித நகரங்களில் ஒன்றாகவும் ஜெருசலேம் உள்ளது. இஸ்லாமிய மதத்தின் 3வது புனித தலமான அல்-அக்ஸா மசூதி இங்கு அமைந்துள்ளது.
அதேபோல் இங்குள்ள 'செபுல்கர்' என்ற பழம்பெருமை மிக்க தேவாலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதாகவும், பின்னர் அவர் இங்கு மறு பிறவி எடுத்ததாகவும் கிறிஸ்தவர்களால் நம்பப்படுகிறது.
கிறிஸ்தவத்தின் ஆறு பிரிவுகள் சேர்ந்து இந்த தேவாலயத்தை நிர்வகிக்கின்றன. 17-18 ஆம் நூற்றாண்டில் புனித 'செபுல்கர்' தேவாலயம் தொடர்பாக கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே நிறைய சர்ச்சைகள் இருந்தன.
நகர்த்தப்படாத ஏணி
அப்போது ஜெருசலேம் 'உஸ்மானியா சுல்தான்' கட்டுப்பாட்டில் இருந்தது. கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகள் இந்த தேவாலயத்திற்கு உரிமை கோரியபோது, உஸ்மானியா சுல்தான் நிர்வாகம் ‘அன்றைய நிலைமையை’ பராமரிக்க உத்தரவிட்டது.
அன்று முதல் இன்று வரை புனித செபுல்கர் தேவாலயம் அதே நிலைதான் உள்ளது. இதனால் தேவாலயத்தின் ஜன்னலுக்கு ஒன்றுக்கு அருகே 1750 ஆம் ஆண்டு வைக்கப்பட்ட ஏணிப்படி ஒன்று ஒரு இன்ச் கூட நகர்த்தப்படாமல் அப்படியே உள்ளது. பல பிரிவினர் இந்த ஏணிக்கு உரிமை கொண்டாடுகின்றனர். இதன் காரணமாக 270 ஆண்டுகள் கடந்து இந்த ஏணியை அகற்ற யாருக்கும் துணிவு வரவில்லை.