பதவி பறிப்பு விவகாரம்.. நீதிமன்றத்தை நாடிய மஹூவா மொய்த்ரா..!!
தனது எம்.பி பதவி பறிக்கப்பட்டத்தை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மஹூவா மொய்த்ரா
மேற்குவங்காளத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி நாடு முழுவதும் பெரும் பிரபலமடைந்தார்.
அவரின் இவ்வாறான கேள்விகளை எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிா்லாவிடம் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகள் அடுத்து, நாடாளுமன்ற நெறிமுறை குழு தலைவர் வினோத் குமார் சோன்கர் மக்களவையில் விசாரணையின் அறிக்கையை கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 8) தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது நாடு முழுவதிலுமுள்ள எதிர்கட்சிகளிடம் இருந்து பெரும் எதிர்ப்புகளை பெற்ற நிலையில், தற்போது தனது நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா வழக்கு தொடர்ந்துள்ளார்.