மருத்துவமனையில் பச்சிளங்குழந்தையை எறும்புகள் கடித்ததால் உயிரிழப்பு - உறவினர்கள் போராட்டம்!
உத்தரப்பிரதேசத்தில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை எறும்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம்
உத்தர பிரதேசமாநிலம், மஹோபா மாவட்டத்தில் மாவட்ட மகளிர் மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு சுரேந்திர ரைக்வார் என்பவர் தனது மனைவி சீமாவை அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சீமாவுக்கு கடந்த 30-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் சிறப்புப் பிரிவில் வைக்கப்பட்டது.
இந்நிலையில், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவில் சுகாதாரமின்றி எறும்புகள் அதிகளவு இருந்து வந்தாக சீமாவின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குழந்தை உயிரிழப்பு
இதனை தொடர்ந்து அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது. இதையடுத்து எறும்பு கடித்ததால் தான் குழந்தை பலியானதாகக் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மருத்துவரகள் தங்களிடம் 6,500 ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாகவும் உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ள நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவமனையின் அலட்சியத்தால் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்து வருகிறது.