2-வதும் பெண் குழந்தை..விரக்தியடைந்த கணவன் - மனைவியை சரமாரியாக அடித்து உதைத்த உறவினரகள்!
உத்தர பிரதேசத்தில் பெண் குழந்தையை பெற்றதற்காக பெண் ஒருவரை கணவர் மற்றும் அவரது வீட்டார் கொடூரமாக தாக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், மஹோபா மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஆண் குழந்தையை பெற்றுக்கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அந்த பெண்ணை அடித்தும் துன்புறுத்தியும் கொடுமை செய்து வந்துள்ளனர்.
முதல் குழந்தை பெண்ணாக பிறந்த நிலையில் இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்துள்ளது. இதனால் கணவரின் வீட்டார் பல சமயங்களில் அந்த பெண்ணுக்கு உணவளிக்காமல் சித்திரவதை செய்து வந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த பெண் கூலி வேளைக்கு செல்ல துவங்கியுள்ளார். இந்நிலையில், அவரை இரண்டு பெண்கள் காலால் உதைத்தும், கைகளால் சரமாரியாக தாக்குவதும் அவர்களிடம் அந்த பெண் கெஞ்சுவதும் போன்ற காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பெண் மீது கொடூர தாக்குதலை நடத்திய மற்ற இரண்டு பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் காயப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.