எதற்காக நான் ஓடி ஒளிய வேண்டும் - விளக்கமளிக்க சென்னை வருகிறார் மகா விஷ்ணு!
சென்னைக்கு வந்தவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்து விளக்கம் அளிக்கப்போவதாகவும் மகா விஷ்ணு வீடியோ வெளியிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மகா விஷ்ணு என்பவர் மாணவர்களுக்குப் பாவ - புண்ணியம், மறுபிறவி, குறித்தும் முன்ஜென்மத் தவறு செய்ததால் தான் மாற்றுத்திறனாளியாகப் பிறக்கிறார்கள் எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இவரது பேச்சுக்கு அப்பள்ளியில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மகா விஷ்ணு மரியாதைக் குறைவாகப் பேசியுள்ளார்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் தன்னுடைய எக்ஸ் வலைப் பக்கத்தில், "பள்ளி வளாகம் என்பது ஆசிரியர்களுக்கானது. நமது மாணவச் செல்வங்களுக்கானது.
நமது பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களிடம் உரையாடுபவர்களின் பின்புலத்தை ஆராய வேண்டிய கடமை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உண்டு.எந்தவொரு கருத்தையும் அறிவியல் ரீதியாக பகுத்தறிந்து சிந்திக்க வேண்டும் என்பதை நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.கல்வியால் உலகை வெல்வோம்.
மகா விஷ்ணு
அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம். கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவு குறித்து சென்னைக்கு வந்தவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்து விளக்கம் அளிக்கப்போவதாகவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் , கடமைகள் இருந்ததால், அசோக் நகர் பள்ளி, சைதாப்பேட்டை பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அடுத்த நாளே ஆஸ்திரேலியா வந்துவிட்டேன். இதில் ஓடி ஒளிவதற்கான விஷயமே கிடையாது. எதற்காக நான் ஓடி ஒளிய வேண்டும்.
ஓடி ஒளியும் வகையில் நான் என்ன தவறான கருத்தைச் சொல்லிவிட்டேன். இன்று (சனிக்கிழமை) மதியம் 1.10 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு விளக்கத்தை அளிக்கிறேன் என்று அந்த வீடியோ வில் கூறியுள்ளார்.