86 வயதிலும் உழைப்பு - அரசு பள்ளிக்கு 1.81 கோடியை அள்ளித்தந்த அப்பள வியாபாரி!
அப்பள வியாபாரி அரசு பள்ளிக்கு 1.81 கோடியை நன்கொடை அளித்துள்ளார்.
அப்பள வியாபாரி
மதுரை, தத்தனேரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (86). இவர் சொந்தமாக மோர்மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்கிறார். இந்நிலையில், 2018ல் துரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பறைகள், இறை வணக்கக் கூட்ட அரங்கம்,
இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவற்றை 1.10 கோடியில் கட்டிக் கொடுத்துள்ளார். மேலும், அண்மையில் ரூ.71 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் மாநகராட்சி கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவுக்கூடம், கழிப்பறைகளை அமைத்து கொடுத்துள்ளார்.
அரசுப் பள்ளிக்கு நன்கொடை
கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ரூபாய் 10 லட்சம் செலவில் டிபன் பாக்ஸ், தட்டு, அப்பளம், வடகம், அரிசி கொடுத்து வந்தார். ஊழியர்களை ஹைதராபாத்துக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்று வந்துள்ளார்.
இவரை நேரில் அழைத்து மாநகராட்சி ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார் பாராட்டினார். இதுகுறித்து ராஜேந்திரன் கூறுகையில், நான் மதுரைக்கு வரும் போது எதையும் கொண்டு வரவில்லை.
இங்கு வந்து தான் சம்பாதித்தேன். அந்த பணத்தை மதுரை மக்களுக்கு கொடுக்கிறேன். எனக்கு 3 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து விட்டேன்.
மீதமுள்ள வாழ்க்கையில் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், இவரை பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.