தேர்தல் நன்கொடை வசூலில் பாஜக முதலிடம்
கடந்த 2021 மற்றும் 2022-ல் பாஜக பெற்ற நன்கொடை 154 சதவீதம் அதிகரித்து ரூ.1,917 கோடியாக உயர்ந்துள்ளது. தேர்தல் ஆணைய இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தேர்தல் நன்கொடை அதிகரிப்பு
இதுகுறித்து தேர்தல் ஆணைய வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2021-22 நிதியாண்டில் 8 தேசிய கட்சிகள் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்த அளவில் ரூ.3,289 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளன.
இதில், பாஜகவின் பங்கு மட்டும் 58 சதவீத அளவிற்கு உள்ளது. திரிணமூல் காங்கிரஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையின் அளவு கடந்த நிதியாண்டில் ரூ.285.7 கோடியிலிருந்து 89 சதவீதம் உயர்ந்து ரூ.541.2 கோடியாக அதிகரித்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சிதான் முன்பை விட அதிக அளவில் நன்கொடையை திரட்டியுள்ளது. அதன்படி, 2021-ல் ரூ.74.4 கோடியாக மட்டுமே இருந்த அக்கட்சி பெற்ற நன்கொடை 2022-ல் 633 சதவீதம் உயர்ந்து ரூ.545.7 கோடியைத் தொட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக சிபிஎம் கட்சி ரூ.162.2 கோடியும் ,பகுஜன் சமாஜ் ரூ.43.7 கோடியும் நன்கொடையாக பெற்றுள்ளன . அதிக நன்கொடை பெற்றதைப் போலவே செலவினத்திலும் பாஜகவே முதலிடத்தில் உள்ளது அக்கட்சி, கடந்தாண்டு மட்டும் ரூ.854.46 கோடியை செலவு செய்துள்ளது.
காங்கிரஸ் ரூ.400 கோடி, திரிணமூல் ரூ.268.3 கோடி, பிஎஸ்பி 85.1 கோடி, சிபிஎம் 83.41 கோடி, சிபிஐ 1.2 கோடி, என்சிபி ரூ.32.2 கோடி செலவிட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.