மதுரை டூ பெங்களூர் இன்று முதல் 6 மணி நேரம் தான் - வந்தே பாரத் ரயிலில் உள்ள சிறப்பம்சம்
மதுரையிலிருந்து பெங்களூர் வரை செல்லும் , வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
மதுரை டூ பெங்களூர்
மதுரையிலிருந்து பெங்களூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயிலுக்கான சோதனை ஓட்டம் 17.06.2024 அன்று நடைபெற்றது. அதே போல் மறு மார்க்கமாக பெங்களூரிலிருந்து மதுரை வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது.
சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.
பயணக்கட்டணம்
இந்த ரயில் மதுரையிலிருந்து அதிகாலை 5.15 மணிக்கு இயக்கப்படுகிறது. அதன் பின் திண்டுக்கல்லுக்கு அதிகாலை 5.58 மணிக்கு செல்லும். அங்கிருந்து காலை 6 மணிக்கு கிளம்பி, திருச்சிக்கு 7.10 மணிக்கு செல்கிறது. திருச்சியிலிருந்து 7.15 மணிக்கு புறப்பட்டு 8.18 மணிக்கு கரூரை சென்றடைகிறது. கரூரிலிருந்து 8.20 மணிக்கு கிளம்பி ஜோலார்பேட்டை வழியாக மதியம் 1.15 மணிக்கு பெங்களூர் சென்றடைகிறது.
அதே போல் பெங்களூரிலிருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மதுரை வந்தடைகிறது. இந்த வந்தே பாரத் ரயில் முதலில் 16 பெட்டிகள் அல்லது 8 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ளது. 435 கி.மீ. தூரத்ததை 6 மணி நேரத்தில் கடக்கிறது. இதில் எக்சிகியூட்டிவ் மற்றும் சேர் கார் ஆகிய இரு பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் பயணிக்க ஏசி சேர் காரில் 1300 ரூபாயும், எக்சிகியூட்டிவ் கோச்சில் 2300 ரூபாயும் பயணக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு நிற ரயில்
தமிழகத்தில் இதுவரை வெள்ளை நிற வந்தே பாரத் ரயில்களே இயக்கப்பட்ட நிலையில் இந்த வழித்தடத்தில் ஆரஞ்சு நிற ரயில் இயக்கப்பட உள்ளது. இதில் வெள்ளை நிற வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட பின் எதையெல்லாம் மேம்படுத்த வேண்டும் என பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டு அதையெல்லாம் மேம்படுத்தி ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயிலை உருவாக்கியுள்ளது.
அதனடிப்படையில், சீட்டுகள் அதிக குஷன் தன்மை, பூட் ரெஸ்ட், வாஷ்பேஷன்கள், சீட்டு சாய்வு ஆங்கிள், ரீடிங் லைட்டுகள் ஆகியவை இந்த ரயிலில் மேம்படுத்தப்பட்டுள்ளது.