பல ஆண்டுகளாக தண்ணி காட்டிய குற்றவாளி - மதுரை பரோட்டா வைத்து பிடித்த போலீசார்
கொலை வழக்கில் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளியை பரோட்டா மூலம் காவல் துறை கைது செய்துள்ளனர்.
சிவக்குமார்
கோவையைச் சேர்ந்த பட்டதாரியான சிவக்குமார், தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளும் தெரிந்தவர். கடந்த 2004ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.
மேலும் வேளச்சேரியில் 2012 ம் ஆண்டு தன்னுடன் தங்கியிருந்த ஏழுமலை என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனிடையே, 2019 ம் ஆண்டு கேரள கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
6 மாதங்கள் கழித்து கொரோனா பொதுமுடக்கத்தின்போது கன்னூர் மத்திய சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்த இவர் தலைமறைவாகிவிட்டார். மேலும் கிண்டி கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகததால் 2020ல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார்.
சென்னை காவல்துறை
இதன் பின் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கிய சென்னை காவல்துறை கோவையில் உள்ள அவரது மனைவியிடம் விசாரனையை, அவரை பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது, மகள் திருமணத்துக்குக் கூட வரவில்லை என கூறியிருக்கிறார்.
சந்தேகத்தின் பேரில் அவரது மனைவியின் பல்வேறு வங்கிக் கணக்குகளை ஆராய்ந்தபோது, பெங்களூருவில் உள்ள வங்கியிலிருந்து ஒரு சிறிய தொகை அவ்வப்போது வங்கிக் கணக்குக்குப் போடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள இந்திய உணவகத்தில் விசாரணை செய்தபோது, அங்கு வேலை செய்த பணியாளர்கள், சிவக்குமாரின் புகைப்படத்தைப் பார்த்ததும், இவர் தங்களுடன் பணியாற்றி வந்ததை உறுதி செய்தனர்.
மதுரை பரோட்டா
உடனே காவல்துறையினர் சிவகுமாரை பிடிக்க திட்டம் ஒன்றைத் தீட்டினர். மதுரை ஸ்டைலில் பரோட்டா செய்ய தெரிந்த காவலர், ஒரு சில வாரங்களுக்கு முன்பு, அந்த உணவகத்துக்குச் சென்றுள்ளார். தான் பரோட்டா மாஸ்டர் என்று கூறி, உணவகம் தொடங்க விரும்புவதாகவும், அதன் நுணுக்கங்களை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் கூறி உணவகத்தை அணுகியிருக்கிறார்.
அங்கு சிவக்குமாரிடம் பழக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, அந்த காவலர் கொடுத்த தகவலால் உரிய நேரத்தில் காவல்துறையினர் உணவகத்தை சுற்றிவளைத்து, எந்த அசம்பாவிதமும் இன்றி சிவகுமாரை கைது செய்துள்ளனர். தற்போது அவர் கேரள சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஒரே இடத்தில் வேலை செய்யாதது, அவ்வப்போது சிம்கார்டுகளை மாற்றுவது என பல விஷயங்களை சிவக்குமார் கையாண்டதால் அவரைப் பிடிப்பதில் காவல்துறைக்கு சவாலாக இருந்துள்ளது. ஒரு சிறிய தவறு நேரிட்டிருந்தால் கூட, எங்களிடமிருந்து அவர் தப்பியிருப்பார், பிறகு அவரை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் ஆகியிருக்கும் என்கிறார்கள் காவல்துறையினர்.