சுடசுட கறிவிருந்து ; சாதி,மத வேறுபாடில்லை - ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கோயில் திருவிழா!
18 கிராமங்களை சேர்ந்த ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பிரமாண்ட கறி விருந்து திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
சுடசுட கறிவிருந்து
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெருமாள்கோவில்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற கரும்பாறை முத்தையா கோவில் அமைந்துள்ளது. இங்கு மிகவும் பிரபலாமான ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ உணவு திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் நிகழும் இந்த விழாவில் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் வைப்பார்கள். தங்களது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கருப்பசாமிக்கு கருப்பு ஆடுகள் மட்டுமே பலி கிடாவாக வழங்கப்படும். இந்த திருவிழாவில் முக்கிய அம்சமாக சாமிக்கு 125 ஆடுகள் பலியிடபட்டு 2 ஆயிரத்து 500 கிலோ அரிசியில் அன்னதான உணவு சமைக்கப்பட்டது.
கோயில் திருவிழா
சமைக்கப்பட்ட உணவு, இறைச்சி சாமிக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.இந்தக் கறி விருந்தில் கலந்துகொண்ட 15,000-க்கும் மேற்பட்டோருக்கு வாழை இலையில் சுடச்சுட சோறும் ஆட்டுகறி குழம்பும் பரிமாறப்பட்டது.சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம்.
ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோயிலுக்கு சாமி கும்பிட வருவார்கள்.இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண் பக்தர்கள் கலந்துகொண்டனர். "இந்தத் திருவிழா, சாதி மத வேறுபாடில்லாமல் சமூக நல்லிணக்கத்தோடு நடத்தப்படுகிறது.
குழந்தை வரம், வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியத்திற்காக கருப்பு நிற வெள்ளாடுகளை கோயிலுக்கு நேர்த்திகடனாகச் செலுத்துவார்கள்.இங்குள்ள பாறையை சாமியாக மக்கள் வணங்குவார்கள். இந்தக் கறி விருந்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்" என்று கறிவிருந்தில் கலந்துகொண்டவர்கள் கூறினர்.