1000 ஆண்கள் பங்கேற்கும் 'நிர்வாண திருவிழா' - முதல்முறையாக 40 பெண்களுக்கு அனுமதி!
ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பாரம்பரிய நிர்வாண திருவிழாவில் பங்கேற்க பெண்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நிர்வாண திருவிழா
ஜப்பான் நாட்டின் இனாசாவா நகரில் கொனோமியா என்ற ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சுமார் 1,650 ஆண்டுகள் பழைமையான ஹடகா மட்சுரி எனப்படும் ஆண்கள் நிர்வாணத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் அந்தரங்க உறுப்பை மட்டும் மறைக்கும் 'ஃபண்டோஷி' என்ற பாரம்பரிய உடையை அணிந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்பார்கள். அனைத்து ஆண்களும் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நீர் தடாகத்தில் குளிப்பார்கள். பின்னர் தலைமை பூசாரி புனித நீரை அனைவர் மீதும் தெளிப்பார்.
பின்னர் 100 குச்சிகள் அடங்கிய பண்டலை ஆண்கள் கூட்டத்தில் வீசுவார். அதில் இரண்டு அதிர்ஷ்டக் குச்சிகள் இருக்கும். அந்த இரண்டு குச்சிகளை எடுப்பதுதான் இந்தத் திருவிழாவின் முடிவு. குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் குச்சிகள் யாரிடம் இருக்கின்றனவோ அவர்களே அதிர்ஷ்டக்காரர்கள்.
பெண்களுக்கு அனுமதி
அவர்கள் ஷின்-ஓடோகோ (தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதன்) என அடையாளப்படுத்தப்படுவார்கள். இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டக்காரர்களை குச்சிகள் கிடைக்காத ஆண்கள் தொட முயல்வார்கள்.
ஷின்-ஓடோகோ-வை தொடுவதால் ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டம் தொடரும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் ஆண்கள் மட்டும் நிர்வாணமாகப் பங்கேற்கும் இந்த விழாவில் பெண்களும் பங்குபெற வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஜப்பான் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆனால் சில விதிமுறைகளுடன் 40 பெண்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என அனுமதியளித்திருக்கிறது. மேலும், அந்த பெண்கள் பாரம்பரிய ஹேப்பி கோட் அணிந்து முழு உடையில் இருப்பார்கள் என்றும், மூங்கில் புல்லைத் துணியில் போர்த்தி சன்னதிக்குள் எடுத்துச் செல்ல வேண்டிய 'நஒயிசா' சடங்கில் மட்டுமே பெண்கள் பங்கேற்பார்கள் என்றும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.