ஆயிரம் கண்களால் பார்க்க வேண்டிய நகரம் - வாய்பிளக்க வைக்கும் மதுரையின் வளர்ச்சியும் வரலாறும்!
முப்பெரும் தமிழ் வேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் தலைநகரமாய் இருந்தது கோவில் மாநகர் எனப்படும் மதுரை.
மதுரை
கீழ்திசையின் ஏதென்ஸ் என்று அழைக்கப்பட்ட நகரம். ராமாயணத்திலும், கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்திலும் இடம் பெற்ற பெருமைக்குரியது. மண் சுமந்த கடவுளாகிய சிவபெருமான் இந்நகரில் அறுபத்தி நான்கு அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளார். கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மெகஸ்தனீஸ் எனும் வரலாற்று ஆய்வாளா், மதுரைக்கு வருகை தந்துள்ளார்.
அவரைப் போன்றே, மிக அதிகமான அறிஞா்கள் ரோம், கிரீஸ் நாடுகளிலிருந்து வந்து சென்றுள்ள வரலாற்றுப் பெருமை உடையது. பாண்டிய மன்னர்களின் காலமே, மதுரையின் பொற்காலமாக கூறப்படுகிறது. 13-வது நூற்றாண்டின் துவக்கம் வரை மதுரை, சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
கலை, இலக்கியம்
சோழர்களிடமிருந்து கி.பி. 1223-ம் ஆண்டில் மதுரையை, பாண்டியர்கள் மீட்டனர். மறுபடியும், மதுரை மலர்ச்சி கண்டது. தன் கணவனாகிய கோவலன் “கள்வன்” என்று குற்றம் சாட்டப்பட்டு, பாண்டிய மன்னனால் கொலையுண்ட செய்தி அறிந்த கண்ணகி, அரசனின் அநீதிக்கு எதிராக தன் கற்புத்திறத்தால், மதுரையை எரியச் செய்த வரலாறு கூறும் “சிலப்பதிகாரம்” எனும் காவியம் தோன்றியது.
கி.பி. 1311ஆம் ஆண்டின்போது, டெல்லியை ஆண்டுகொண்டிருந்த அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்கபூா், மதுரைக்கு வந்து களஞ்சியத்திலிருந்த விலைமதிப்பற்ற நவரத்தினங்களையும், பொன் ஆபரணங்களையும், அரிதாக உள்ள பொக்கிஷங்களையும் கொள்ளையடித்துச் சென்றார்.
பொற்காலம்
அதேபோல் மேலும் சில முஸ்லீம் சுல்தான்கள் வந்து அபகரித்து சென்றனா். கி.பி. 1323 ஆம் ஆண்டில், மதுரை உட்பட பாண்டிய சாம்ராஜ்யம் தில்லி பேரரசின் ஒரு மாகாணமாக, துக்ளக் ஆட்சியின் கீழ் மாறியது. அதன்பின், 1371இல் விஜயநகர சாம்ராஜ்ய பரம்பரையைச் சார்ந்த “ஹம்பி” என்பவா், மதுரையை கைப்பற்றி விஜயநகர ஆட்சிக்குட்படுத்தினார்.
இந்த பரம்பரையை சார்ந்த ஆட்சியாளா்கள் தாம் கைபற்றிய இடங்களுக்கு “நாயக்கா்களை” கவா்னா்களாக நியமித்து ஆண்டனா். அவா்கள் திறமையான நிர்வாகம் மேற்கொண்டனா். நாயக்கா் மன்னா்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை கப்பமாகச் செலுத்தினா். கி.பி. 1530இல் விஜயநகரப் பேரரசின் “கிருஷ்ணதேவராயா்” இறந்துவிட, நாயக்க மன்னா்கள் சுதந்திரமாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளை ஆட்சி செய்யத் துவங்கினர்.
மாநகராட்சி
நாயக்கா் வம்சத்தில் தோன்றிய திருமலைநாயக்கா் என்பவா் கி.பி. 1623-1659 வரை மதுரையை ஆட்சி செய்தார். மதுரை நகரின் தனிச் சிறப்பே, அதன் நகர வடிவமைப்புதான். மீனாட்சி அம்மன் கோவிலை மையமாக வைத்து, அமைக்கப்பட்ட மாட, ஆவணி, மாசி வீதிகள் பழம் மதுரையின் மிச்சங்கள். இந்தியாவின் மிகச் சிறந்த நகர வடிவமைப்புகளின் பட்டியலில் மதுரையும் உள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு மதுரை, தமிழகத்தின் முக்கிய மாவட்டமாக மாறியது. இன்று சென்னைக்குப் பிறகு முக்கிய நகராக மதுரை உள்ளது. பாரம்பரியம், புராதன வரலாறும், செறிவான கலாச்சாரப் பின்னணியுமே, இந்தப் பெருமையைக் கொடுத்துள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மதுரையில் வசிக்கின்றனர். தினந்தோறும் வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை, இந்த எண்ணிக்கையில் பாதியாகும்.
பொருளாதாரம்
சிறந்த போக்குவரத்து வசதி, நல்ல கல்விச் சூழ்நிலை, வளர்ந்து வரும் தொழில் துறை, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மருத்துவ வசதிகள், மணம் வீசும் மல்லிகைப் பூ வர்த்தகம், பேர் சொல்லும் சுங்கிடிச் சேலைகள் என மதுரைக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய கோவில்களில் ஒன்றான மீனாட்சி அம்மன் கோவில் உட்பட பல பழமையான கோவில்கள் உள்ளன. மேலும் இது சிக்கலான சிற்பங்கள் மற்றும் சிற்பங்களுக்கு பெயர் பெற்றது. திருமலை நாயக்கர் மஹால், கூடல் அழகர் கோயில் மற்றும் காந்தி நினைவு அருங்காட்சியகம் ஆகியவை பிரபல சுற்றுலா அம்சங்களாக விளங்குகிறது. இலக்கியம், கலை மற்றும் இசையின் நீண்ட வரலாற்றைக் கொண்ட வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
இயற்கை வனப்பு
இயற்கை எழில் கொஞ்சும் பல அருவிகள் உள்ளது. வைகை ஆற்று கரையில் அமைந்துள்ள மதுரைக்கு அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவி இங்கு உள்ளது. இந்த அருவி அறுநூறு அடி உயரத்தில் இருந்து விழுகிறது. கிளிமூக்கு அருவி, காட்டுப்பாறை அருவி, ஒத்தபாறை அருவி, கிளிநொச்சி அருவி மற்றும் மழைக்காலங்களில் மட்டும் தோன்றி மறையும் பல அருவிகள் காணப்படுகிறது.
மலிவு விலையில் இரவு பகல் என 24 மணிநேரமும் சாப்பாடு தரும் ஊர். திரும்பிய இடமெல்லாம் விதவிதமான கடைகள் உணவகங்கள் சாப்பிட வருவோரின் சொர்க்க பூமியாகவே மதுரை திகழ்கிறது. பாலில் கலந்த நீரை எப்படி பிரிக்க இயலாதோ அதே போல் தமிழையும் மதுரையும் பிரிக்க இயலாதவை என்பது மறுக்க முடியாத உண்மையே. உலகம் எல்லாம் இரவு தூங்கி போனாலும் மதுரை என்றும் தூங்கா நகரமாக ஜொலித்துக் கொண்டுள்ளது.