மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் - வெளியான முக்கிய அப்டேட்
மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.
மெட்ரோ ரயில்
தமிழ்நாட்டில் சென்னையில் பல்வேறு தடங்களில் மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகிறது. மேலும் பல இடங்களில் அடுத்த கட்ட வேலைகள் நடை பெற்று வருகிறது. சென்னையை தொடர்ந்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான மதுரை மற்றும் கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதில் மதுரையில் ரூ. 8500 கோடியில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 20 ரயில் நிறுத்தங்கள் 3 நிறுத்தங்கள் பூமிக்கு அடியில் உள்ளவாறு அமைக்கப்பட உள்ளது.
மதுரை கோவை மெட்ரோ
மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஐதராபாத் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை ஜூலையில் வழங்குமாறு கேட்டிருந்தது.
இதே போல் கோவை மெட்ரோ ரயில் திட்டமும் ரூ 9424 கோடி மதிப்பீட்டில் 139 கி.மீ. தொலைவுக்கு 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக 45 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி முதல் கருமத்தம்பட்டி வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் உள்ள வலியம்பாளையம் பிரிவு வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி
இந்நிலையில் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை ஆய்வு செய்ய சென்னை வருகை தந்துள்ள பன்னாட்டு ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி, நாளை (03.07.2024) மதுரை மெட்ரோ ரயில் அமையும் இடங்களையும், நாளை மறுநாள் (04.07.2024) கோவையில் அமைய உள்ள மெட்ரோ வழித்தடத்தையும் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். இதன் பின் ஜூலை 4ம் தேதி தமிழ்நாடு நிதித்துறை செயலாளரை சந்தித்துஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு செய்ய வரும் நிலையில், விரைவில் நிதி கிடைக்கப்பெற்று மத்திய அரசு ஒப்புதல் வழங்கி விட்டால் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான பணிகளுக்கு 3 ஆண்டுகள் எடுக்கும் நிலையில் 2027 - 2028 ல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.