இனி சென்ட்ரல் டூ கிளாம்பாக்கம் 20 நிமிஷம் - சென்னைக்கு வரும் ஏர் டாக்சி
சென்னைக்கு விரைவில் ஏர் டாக்சி வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர் டாக்சி
கார் டாக்சி, பைக் டாக்ஸியில் பயணித்த சென்னை வாசிகள் இனி ஏர் டாக்ஸியில் பயணிக்க உள்ளனர். அமெரிக்காவின் விமானக் கட்டுமான நிறுவனமான போயிங் தமிழக அரசுடன் இணைந்து, சென்னை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ஏர் டாக்சியை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த பறக்கும் டாக்சிகள் செங்குத்தாக புறப்பட்டு ஓடுபாதையின் உதவியின்றி தரையிறங்கும்.
ஏர் டாக்சிகள் புறப்படுவதற்கான இடம் மற்றும் இறங்குவதற்கான இடங்கள் என நகரின் முக்கிய பகுதிகளில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவிருக்கின்றன. இந்த வழித்தடத்தை அமைப்பதுடன், அதற்கான தொலைத்தொடர்பு, வரைபடங்கள், கண்காணிப்பு முறை, பயணிகளை கையாளும் அமைப்பு, பாதுகாப்பு நெறிமுறைகள் என அனைத்தும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உணவு மற்றும் தளவாடம்
இது தொடர்பாக சென்னையின் ஒருங்கிணைந்த பெருமாநகர போக்குவரத்துக் கழகம் கூறுகையில், ஆரம்பக் கட்டத்தில் இந்த ஏர் டேக்ஸி சேவையானது உணவு மற்றும் தளவாடங்களைக் கொண்டுச் செல்ல சோதனை முறையில் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
சென்னையில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வான்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவது அத்தியாவசியம் என்று தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் சந்தீப் நந்துரி தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டார்ட் அப்
மேலும், சென்னையை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ePlane நிறுவனம், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பறக்கும் மின்சார டாக்ஸியின் சான்றளிக்கப்பட்ட முன்மாதிரியை உருவாக்கத் தயாராக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இது 3 அல்லது 4 இருக்கைகள் கொண்ட விமானமாக இருக்கும் என்றும், அதை ஏர் ஆம்புலன்ஸாக மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது.
நகரங்களில் நிலவும் கடும் போக்குவரத்துப் பிரச்சினைக்கான தீர்வாக இந்த வகை பறக்கும் டாக்ஸியை உருவாக்கி வருவதாகத் தெரிவித்திருக்கிறது e-Plane நிறுவனத்தின் நிறுவனர் சத்யா சக்கரவர்த்தி.
இந்த e-Plane 1 மணி நேர பயணம் நேரத்தை 15 நிமிடமாக மாற்றும் என தெரிவித்துள்ளது. எப்படியோ கூடிய விரைவில் சென்னைவாசிகள் ஏர் டாக்ஸியில் பயணம் செய்ய இருக்கிறார்கள்.